பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்ததற்கு கடும் எதிர்ப்பு : சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் கண்டன ஆர்பாட்டம்!!!

சென்னை:  சென்னையில் பச்சையப்பன் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்ததை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் இயங்கி வரும் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் 6 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில், பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, செல்லம்மாள் பெண்கள் கல்லூரி, காஞ்சிபுரத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பச்சையப்பன் கல்லூரி, மற்றும் கடலூரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி ஆகியவை அடங்கும். இந்நிலையில்,  பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர் புகார்கள் எழுந்தன.

இதனால் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சண்முகம் அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் விதிகளை மீறி, பலரும் நியமிக்கப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில், முன்னாள் நீதிபதி சண்முகம் விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து, 2014 முதல் 2016 வரை விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாக சுமார் 152 பேருக்கு  நீதிபதி சண்முகம் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் தற்போது, அதில் 105 பேரை பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை கண்டித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில், பச்சையப்பன் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராசிரியர் மீதான இந்த நடவடிக்கையை முன்னாள் நீதிபதி உடனடியாக கைவிட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: