பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக காவல், சீருடைப் பணி அதிகாரிகள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஆணை..!!

சென்னை: தமிழக காவல், சீருடைப் பணி அதிகாரிகள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி 131 பேருக்கு பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, சிறைத் துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழக விரல்ரேகைப் பிரிவு தடய அறிவியல் துறை அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தன்று முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலை காவலர் வரையிலான 100 அதிகாரிகள்,  பணியாளர்களுக்கும்,  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில்  துணை இயக்குநர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10  அதிகாரிகள், பணியாளர்களுக்கும், சிறைத்துறையில் உதவி சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அதிகாரிகள், பணியாளர்களுக்கும், ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் ஊர்க்காவல் படை வீரர் வரையிலான 5 அதிகாரிகள்பணியாளர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அதிகாரிகள் முறையே உதவி இயக்குநர், அறிவியல் அலுவலர் ஆகியோருக்கு அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் முதல்வரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதக்கங்கள் பெறுகின்றவர்களுக்கு அவரவர் தம் பதவிக்கேற்றவாறு, பதக்க விதிகளின்படி வெண்கல பதக்கம் மற்றும் ஒட்டுமொத்த மானியத் தொகையும் அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: