ஜெயலலிதா நினைவிடத்தில் மேடையில் பதிக்க ரூ.2.11 கோடியில் கிரானைட் கற்கள்: ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டது

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.2 கோடி செலவில்  மேடை அமைப்பதற்காக ராஜஸ்தானில் இருந்து கிரானைட் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க ரூ.50.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நினைவிட கட்டுமான பணிகளுக்கு 2018 மே மாதம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் மையம் அமையவுள்ளது. இங்கு சிலிக்கானால் உருவாக்கப்பட்ட ஜெயலலிதா சிலை வைக்கப்படுகிறது.

இதற்காக, டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பீனிக்ஸ் பறவை சுற்றி ரூ.2 கோடியே 11 லட்சம் செலவில் மேடை அமைக்க டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பீனிக்ஸ் பறவை கட்டுமான பணி முடிந்தவுடன் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை கொண்டு அந்த மேடை அமைக்கப்படுகிறது. அந்த மேடை அமைக்கப்பட்டவுடன் அருகில் இரண்டு பக்கமும் புல்வெளி மற்றும் செயற்கை நீர் தடாகம் அமைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடம் முன்பு மார்பளவு வெண்கல சிலை ஒன்றும், எம்ஜிஆர் நினைவிடத்தில் இருப்பது போன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அணையா விளக்கு ஒன்றும் வைக்கப்படுகிறது. இப்பணிகளுக்காக அரசிடம் இருந்து கூடுதலாக ரூ.12 கோடி கேட்கப்பட்டுள்ளது.

Related Stories: