கொரோனா நோயாளி சென்ற ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது; 3 பேர் காயம்; பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: கொரோனா நோயாளி மற்றும் அவருடன் வந்தவரை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நோயாளி உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி மேம்பாலம் கீழ்ப்பகுதியில் நேற்று மதியம்  ஆம்புலன்ஸ் ஒன்று கவிழ்ந்து கிடப்பதாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் வானமாமாலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர்,   உடனடியாக ஆம்புலன்சில் உள்ளே சிக்கி கொண்டு இருந்த மூன்று பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

அவ்விசாரணையில் ஆம்புலன்ஸ் ஓட்டி வந்தவர் சுரேஷ் என்றும் இவர் ஆந்திராவிலிருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவருடன் ஒருவர் என இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க வந்ததாகவும் வரும் வழியில் நிலைதடுமாறி ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விட்டதாகவும் தெரியவந்தது. இதில் ஆம்புலன்சில்  வந்த இரண்டு பேரும் லேசான காயங்களுடன் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இது குறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா நோயாளி வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்த சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: