நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திடம் குடிமராமத்து பணிகள் ஒப்படைக்க முடிவு

சென்னை: குடிமராமத்து திட்டப்பணிகளை இனி நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலை நடத்தி பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைப்பதற்குள் பருவமழைக்காலம் முடிந்துவிடும். இதனால் குறித்த காலத்தில் பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் கடந்த 2016ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்ட பணிகள் ஆரம்பத்தில் ஒப்பந்த நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஒப்பந்த நிறுவனம் முறையாக பணிகள் மேற்கொள்ளவில்லை என்ற புகார் வந்தது. இதையடுத்து குடிமராமத்து பணிகள் விவசாய சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர்கள் அல்லது ஆயக்கட்டுதாரர்களின் குழுவிற்கு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த 2016-17ல் 92.85 கோடி செலவில் 1513 பணிகளும், 2017-18ல் 276 கோடி செலவில் 1463 பணிகளும், 2019-20ல் 499 கோடி செலவில் 1829 பணிகளும், 2020-21ல் 500 கோடி செலவில் 1364 பணிகள் எடுத்து கொள்ளப்பட்டன. ஆனால், விவசாயிகளிடம் அந்த பணிகளை ஒப்படைக்கப்படும் பட்சத்தில் அந்த விவசாயிகள் சங்கங்களாக பதிவு செய்து அதன் பிறகு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த சிக்கலால் 2019-20ல் எடுத்து கொள்ளப்பட்ட பணிகளில் 10 சதவீதம் கூட முடியவில்லை. அதேபோன்று 2020-21ல் எடுத்து கொள்ளப்பட்டபணிகளில் 40 சதவீத பணிகள் தற்போது வரை நடந்து வருகிறது. இப்பணிகளை அக்டோர் முதல் வாரத்திற்குள் முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குடிமராமத்து திட்ட பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திடம் ஒப்பபடைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் அந்தெந்த மாவட்ட அளவில் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, தேர்தல் நடத்த பொதுப்பணித்துறை திட்டமிட்டிருந்தது.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்துக்குள் இச்சங்கத்துக்கு தேர்தல் நடத்தி முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜனவரியில் அடுத்த ஆண்டு குடிமராமத்து திட்ட பணிகளை தமிழ்நாடு நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். அதற்குள் பருவமழை காலம் முடிந்துவிடும் என்பதால் மழைநீரை எப்படி சேமிப்பது என்ற பிரச்னை எழுந்துள்ளது.

Related Stories: