டாஸ்மாக் கடைகளில் பணப்பெட்டிகள் பொருத்தும் பணி தொடக்கம்; அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 80 முதல் 130 கோடி வரையில் வருவாய் கிடைக்கிறது. இந்தநிலையில் வசூலாகும் பணத்தை டாஸ்மாக் கடைகளில் உள்ள பணப்பெட்டியில் பாதுகாப்பாக வைத்தாலும் அவை கொள்ளை போகிறது. இதை தடுக்க டாஸ்மாக் நிர்வாகம் ஆய்வு நடத்தியது. அதன்படி, தமிழகம் முழுவதும் 2,825 டாஸ்மாக் கடைகள் பணம் வைக்க பாதுகாப்பு இல்லாத கடைகளாக உள்ளது தெரியவந்தது. எனவே அந்த கடைகளில் பணப்பெட்டிகள் நிறுவ முடிவு செய்யப்பட்டது. மார்ச் மாதத்திற்குள் இப்பணிகளை முடிக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி இப்பணியை முடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்தநிலையில், தளர்வுகளின் அடிப்படையில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் பணப்பெட்டிகள் பொருத்தும் பணியை டாஸ்மாக் நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 2,825 டாஸ்மாக் கடைகளில் 300 கிலோ எடைகொண்ட பணப்பெட்டிகள் நிறுவும் பணி இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. கிராமப்புற மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள கடைகளில் பணப்பெட்டிகள் நிறுவப்பட்டு வருகிறது. இனிமேல் விற்பனை பணத்தை பணியாளர்கள் வீட்டிற்கு எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பணப்பெட்டிகள் நிறுவும் பணி 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும். செப்டம்பர் மாதத்தில் 600 பெட்டிகளும், வரக்கூடிய மாதங்களில் 800 முதல் 850 பெட்டிகள் வரை மாதம் தோறும் நிறுவப்படும். இதேபோல், சிசிடிவி பொருத்த தேர்ந்தெடுக்கப்பட்ட 3,000 டாஸ்மாக் கடைகளில் தற்போது 800 கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்திற்குள் இப்பணி முடிவடையும். இவ்வாறு கூறினார்.

Related Stories: