இளைஞர்களை திசை மாற்றிய கொரோனா குமரியில் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளை

* அரிவாளை காட்டி பணம், செல்போன்கள் பறிப்பு

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் அரிவாளால் மிரட்டி வழிப்பறி செய்வது அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கொரோனா தாக்குதல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமுலுக்கு வந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், தொழில்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். பின்னர் ஜூன் மாதத்தில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தொழிற்சாலைகளும், தொழிற்கூடங்களும் இயங்கின. செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து பொது போக்குவரத்தும் தொடங்கி உள்ளது. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் தவிர மற்ற அனைத்தும் இயங்கி வருகின்றன. மெல்ல, மெல்ல சகஜ நிலைக்கு மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக குமரி மாவட்டத்தில் குற்ற செயல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. குறிப்பாக கோயில்கள், வீடுகள், கடைகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. சமீப காலமாக வழிப்பறிகள் அதிகரித்துள்ளன. பைக்கில் வந்து அரிவாளை காட்டி மிரட்டியும், அரிவாளால் வெட்டியும் பணம், நகைகள், ெசல்போன்கள் பறிக்கப்படுகின்றன. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் ஆரல்வாய்மொழியில் அப்பாவி தொழிலாளர்கள் 2 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

கடந்த 10ம் தேதி இரவு நாகர்கோவில் செட்டித்தெருவில் கடை நடத்தி வரும், பறக்கை பகுதியை சேர்ந்த ரோஸ்பாண்டியன் என்பவரை வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார். அந்த வாலிபர் செல்லும் வழியில் கோட்டார் செட்டிதெருவை சேர்ந்த மேரி குளோரி என்ற பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி செல்போனை பறித்துள்ளார். அந்த வழியாக வந்த கதிரேசன் என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார்.

இதே போல் நாகர்கோவில் அருகே கண்ணன்குளம் பகுதியில் அகமது என்பவர் செல்லும் போது பைக்கில் வந்த 3 பேர் அகமதுவிடம் அரிவாளை காண்பித்து செல்போனை பறித்துச்சென்றனர். இந்த சம்பவங்கள் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பழைய குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ஒரு நபரின் தலைமையில் தான் இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்துள்ளது. அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. தற்போது இவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதே போல் கன்னியாகுமரி வட்டக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் (42) என்பவர், கொட்டாரத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு, சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். பெரியவிளை சந்திப்பில் சென்ற போது பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் அரிவாளை காட்டி கிருஷ்ணனிடம் இருந்த செல்போனை பறித்து விட்டு சென்றனர். தொடர்ச்சியாக தற்போது வழிப்பறி சம்பவங்கள் அரங்கேற தொடங்கி இருப்பது, பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சம்பவங்களில் ஈடுபடுகிறவர்கள் இளம் வயதினர் என கூறப்படுகிறது.

கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளவர்கள் தங்களது பண தேவைக்காக வழிப்பறி சம்பவங்களை தொடங்கி உள்ளனர். பணம் கொடுக்கா விட்டால் ெகாலை செய்து விடுவோம் என கூறி மிரட்டுவதால், பொதுமக்களும் பயந்து போய் தங்களிடம் உள்ள பணம், செல்போன், நகைகளை கொடுக்கிறார்கள். தற்போது கடைகள் அனைத்தும் இரவு 8 மணிக்கு மூடப்படுகின்றன. இதனால் 9 மணிக்கெல்லாம் சாலையில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து குறைந்து விடுகிறது. இதை பயன்படுத்தி இந்த கும்பல் கைவரிசை காட்டி வருகிறது.

இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க, எஸ்.பி. பத்ரிநாராயணன் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தால் தான், மக்கள் நிம்மதியாக சாலையில் நடமாட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இரும்புக்கரம் கொண்டு போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீஸ் ‘கவனிப்பு’ இல்லை

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ரவுடிகளுக்கும், கொள்ளையர்களுக்கும் போலீஸ் மீதான பயம் இல்லை. எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற நிலை வந்து விட்டது. முன்பெல்லாம் ஒரு குற்ற வழக்கில் ஒருவர் கைதானால், ஜாமீனில் வெளி வந்த பின்னரும் குறைந்த பட்சம் 1 வருடம் வரை அந்த நபர் எந்த குற்ற செயலிலும் ஈடுபட மாட்டார். அந்தளவுக்கு போலீஸ் கவனிப்பு இருந்தது. ஆனால் இப்போது எந்த குற்றவாளிகளையும் போலீசார் தங்களது பாணியில் கவனிப்பது இல்லை. அப்படியே ஏதாவது நடந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தான் சிக்கல் வந்து சேருகிறது.

 கொள்ளையர்கள், ரவுடிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடும் நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீசார் மனித உரிமை ஆணையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் நடக்கிறார்கள். அவர்களுக்கு உதவ கூட காவல்துறையில் யாரும் முன் வருவதில்லை. எனவே தனிப்படையில் உள்ள போலீசாரும், நமக்கு என்ன? என்ற மன நிலையில் உள்ளனர். இதுவும் குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ளது. இந்த நிலை மாறினால் தான் சமூகத்தில் குற்ற செயல்களை தடுக்க முடியும் என்றார்.

ரோந்து தீவிரப்படுத்தபடுமா?

கடந்த சில மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். கள பணியில் இருந்த போலீசாரும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.  இன்னும் காவல்துறை சகஜ நிலைக்கு வர வில்லை. குறிப்பாக குற்ற செயல்களை தடுக்கும் வகையில் ேராந்து பணிகள் இல்லை. பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளதால், தற்போது இரவு வேளையில் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக வடசேரி பஸ் நிலையத்தில் நள்ளிரவு 11 மணிக்கு பிறகு கூட பொதுமக்கள் நடமாட்டம் உள்ளது. ஆனால் போலீஸ் கண்காணிப்பு இல்லை. இதனால் கஞ்சா, மது போதை கும்பல் உலா வருகிறார்கள். எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, ரோந்து பணிக்கு எஸ்.பி. உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: