சோத்துப்பாறை அணை நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பெரியகுளம் : பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 8 கி.மீ. தொலைவில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 126 அடி. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் இந்த அணைக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த 1ம் தேதி முதல் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 121.28 அடியாக உயர்ந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்காத நிலையில், அணையின் நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவை எட்ட உள்ளது. அணைக்கு நீர்வரத்து 33 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீருக்காக 3 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணை முழு கொள்ளளவை விரைவில் எட்டும் நிலை உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சோத்துப்பாறை அணையிலிருந்து வெளியேறும் நீர் செல்லும் வராகநதி ஆற்றின் கரையோரமாக உள்ள பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதியில் குடியிருப்போருக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: