நீர்வள ஆதாரங்களை சீரமைத்தல் கழகத்துக்கு தலைவர் மட்டுமே உள்ள நிலையில் ரூ.6 ஆயிரம் கோடியிலான பணிகள் நிலை என்ன?: சமூக ஆர்வலர்கள் கேள்வி

சென்னை: நீர்வள ஆதாரங்களை சீரமைத்தல் கழகத்துக்கு தலைவர் மட்டுமே உள்ள நிலையில் ₹6 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்து 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்று வரை அது காகித அளவிலேயே உள்ளது. தமிழகத்தில் பெரிய அளவிலான நீர்வளப்பிரிவு திட்டபணிகளை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் என்ற அமைப்பு  2018 டிசம்பரில் தமிழக அரசு ஏற்படுத்தியது. இந்த கழகத்துக்கு நிரந்தர தலைவராக சத்யகோபாலை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நியமனம் செய்து  தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த கழகத்துக்கு 4 தலைமை பொறியாளர், 2 கண்காணிப்பு பொறியளர், 2 செயற்பொறியாளர், 1 கம்பெனி செயலாளர்,  நிதி ஆலோசகர் உட்பட 19 பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், தற்போது வரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

இதனால், நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல், சீரமைத்தல் கழகம் ஏற்படுத்தி, 2 வருடம் ஆன நிலையில் எந்தவொரு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, இந்த கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது,  அடுத்த 2 ஆண்டுகளில் ₹6 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டபணிகளை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்ேபாது  வரை இந்த கழகத்துக்கு தலைவர் மட்டுமே உள்ள நிலையில், மற்ற பணியிடங்கள் நிரப்பப்படாததால், திட்ட அறிக்கை தயார் செய்வது, நிதியுதவி பெறுவது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கழகத்துக்கு வெறும் தலைவர் மட்டும் இருந்தால் போதுமா. இவர் ஒருவரே 6 ஆயிரம் கோடி பணிகளை செய்துவிடுவாரா. இப்படியே போனால் அடுத்த பருவமழையின்போது கூட மழைநீரை சேகரிக்க முடியாமல் போய்விடும் என்றனர்.

Related Stories: