மகாளய அமாவாசை நாளில் தெப்பக்குளத்துக்கு செல்ல மக்களை அனுமதிக்க கூடாது: அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் உத்தரவு

சென்னை: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், மகாளய அமாவாசை நாளில் திதி கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூட வாய்ப்புள்ளதால், கோயில் தெப்பக்குளத்துக்கு செல்ல யாரையும் அனுமதிக்க கூடாது என்று அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்கள் செப்.1ம் தேதி திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து கோயில்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் 17ம் தேதி மகாளய அமாவாசை வருகிறது.  அமாவாசை திதி செப்டம்பர் 16ம் தேதி மாலை 7.26 தொடங்கி, செப்டம்பர் 17ம் தேதி (புரட்டாசி 1) மாலை 5.24 வரை நீடிக்கிறது. இந்த அமாவசை நாளில் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்வதை பலர் தங்கள் கடமையாக கொண்டுள்ளனர்.

புரட்டாசி மாத மகாளய அமாவாசை அன்று, முக்கிய புனித தலங்களில் மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவர். இந்த நாளில் தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். தோஷம் அகலும் என்பது ஐதீகம். எனவே, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு கோயில்களின் தெப்பக்குளங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திதி கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களை தெப்பக்குளத்துக்கு அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மகாளய அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கானோர் திதி கொடுக்க வருவார்கள் என்பதால் அவர்களை தெப்பக்குளம் பகுதிக்கு செல்ல அனுமதிக்க கூடாது  என்று அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பேரில், அனைத்து கோயில்களில் தெப்பக்குளங்களின் நுழைவு வாயில் மூடி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: