குற்றப்பிரிவு போலீசார் போக்குவரத்து கழக இயக்குனரிடம் 10 மணிநேரம் விசாரணை: வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை: சென்னை ஜெ.ஜெ.நகரில் போக்குவரத்து கழக இயக்குனர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழக போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்துள்ளனர்.கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அதிமுகவில் இருந்த இவர், பின்னர் திமுகவுக்கு மாறி தற்போது எம்எல்ஏவாக உள்ளார். அவர் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசன் வீட்டுக்கு சென்று நேற்று விசாரித்துள்ளனர். சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அவரது வீட்டில் வைத்து நேற்று காலை 6 மணிலிருந்து மாலை 3 மணி வரை  விசாரணை நடத்தப்பட்டதாகவும், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடுத்த கட்ட நடவடிக்கையாகவே கணேசனிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் சுமார் 10 மணி நேரமாக விசாரணை செய்ததில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: