நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கம்பத்தில் தலைகீழாக தொங்கி வாலிபர் நூதன போராட்டம்

சிதம்பரம்: நீட் தேர்வை ரத்து செய்யக்ேகாரி கம்பத்தில் தலைகீழாக தொங்கி வாலிபர் நூதன போராட்டம் நடத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி(36). இவர் சிதம்பரம் அருகே உள்ள ஏ.மண்டபம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, அந்த பகுதியில் டெய்லர் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர் நீட் தேர்வுக்கு எதிராக நூதன போராட்டம் நடத்தினார். சிதம்பரம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.மண்டபம் கிராமத்தின் சாலை நடுவே உள்ள சிசிடிவி கேமரா கம்பத்தில் தலைகீழாக 5 நிமிடம் தொங்கினார். அப்போது நீட் தேர்வுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினார்.

மேலும் அவர் கையில் வைத்திருந்த பதாகையில், உயிரை காப்பாற்ற படிக்க வேண்டிய படிப்புக்கு, உயிரை போகக்கூடிய நீட் தேர்வு தேவையா? என கேள்வி எழுப்பி இருந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிள்ளை போலீசார் அவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கொரோனா ஊரடங்கு நேரத்திலும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெய்லர் மணி தலைகீழாகத் தொங்கி போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: