அக்.5ம் தேதி பள்ளிகளை திறக்க அரசு ஆலோசனை: சுழற்சி முறையில் வகுப்பு

சென்னை: கொரோனா தொற்று நீடித்து வரும் நிலையில், அக்டோபர் 5ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. கொரோனாவால் மார்ச் 25ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் பாடம் நடக்கிறது. இதற்கிடையில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் இருந்தால், பள்ளிக்கு வந்து பாட ஆசிரியர்களிடம் தெளிவு பெற்று செல்லலாம். அதற்காக 21ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த மாதம் பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது.  

இதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் கல்வி அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அதில், வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் அரசு விடுமுறை, அதற்கு அடுத்த 2 நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறைகள் என்பதால், அக்டோபர் 5ம் ேததி பள்ளிகள் திறக்கலாம் என்று ஆலோசித்து வருகின்றனர்.  பள்ளிகள் திறக்கப்பட்டால் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவியர் பள்ளிக்கு வரலாம். ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் சமூக இடைவெளி விட்டு வகுப்புகளில் மாணவர்கள் அமர வைக்கப்படுவார்கள். இதுதவிர காலை, மதியம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையின் கீழும் வகுப்புகள் நடத்த ஆலோசித்து வருகின்றனர்.

Related Stories: