கொரோனா பரவலை தடுக்க பேரவை தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களை அதிகரிக்க வாய்ப்பு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2021) மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வருகிற நவம்பர் மாதம் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தொடர்ந்து, டிசம்பர் 15ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2021 ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று கூறியதாவது:தமிழகத்தில் தற்போது 67 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 1000 முதல் 1400 வரை வாக்காளர்கள் உள்ளனர். அதனால், 1000 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் அந்த வாக்குச்சாவடி மையங்களை இரண்டாக பிரிப்பது அல்லது ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 1000 பேர் மட்டுமே இருக்கும்படி ஏற்பாடு செய்து இடங்களை தேர்வு செய்து தயார் நிலையில் வைத்திருக்கும்படி மாவட்ட கலெக்டர்களிடம் தேர்தல் ஆணையம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுபற்றி உடனடியாக அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை. தேவைப்பட்டால், சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அதுபற்றி முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது. இப்போதைக்கு அதை தயார் செய்து வைத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று, கூடுதலாக எவ்வளவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்ற விவரத்தையும் தயார் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவை அறிவிக்கும் என்றார்.

Related Stories: