என்கவுன்டரில் பலியான ரவுடி சங்கரின் உடலில் 12 இடங்களில் காயங்கள்: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

சென்னை: ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட பிறகு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்தது  தெரியவந்துள்ளது.

 அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்டர் தொடர்பாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை கோரியும், மறு பிரேத பரிசோதனை கோரியும் சங்கரின்  தாயார் கோவிந்தம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு, ஆய்வாளர் நடராஜனின் விசாரணை அறிக்கை சினிமா கதைபோல புனையப்பட்டுள்ளது. பிரேத  பரிசோதனை அறிக்கையை பார்க்கும்போது, தற்காப்புக்காக சுட்டதாக தெரியவில்லை. திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். அதனால் ஆய்வாளர்  நடராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து விசாரணையை வரும் 14ம் தேதிக்கு (நாளை) நீதிபதி  தள்ளிவைத்தார்.

இந்நிலையில், போலீசார் நடத்திய என்கவுன்டரின்போது  3 முறை சுட்டதில் சங்கரின் உடலில் 12 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக பிரேத  பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர்கள் டாக்டர் விஷ்ணுகுமார், டாக்டர் சிவகுமார் ஆகியோர் நடத்திய பிரேத  பரிசோதனை அறிக்கை எழும்பூர் 5வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிவசக்திவேல் கண்ணனிடம் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், துப்பாக்கி குண்டுகள் சங்கரின் மார்பு, நுரையீரல் பகுதி (வலது மற்றும் இடது), அடிவயிறு, முதுகெலும்பு உள்ளிட்ட இடங்களில்  பாய்ந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையுடன் சங்கர் அணிந்திருந்த துணிகள், காயத்துடன் இருந்த வெளி உடல் தோற்றம், பிரேத  பரிசோதனை நடந்த வீடியோ உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Related Stories: