ஆர்டர் செய்து காத்திருக்கும் மக்கள் கொரோனா தொற்றால் சைக்கிளுக்கு செம டிமாண்ட்: ஊரடங்கில் சைக்கிள் உற்பத்தி

சென்னை: புதுமாடல் பைக், கார் வாங்க புக் செய்து விட்டு மாதக்கணக்கில் காத்திருப்பவர்களை பார்த்திருக்கிறோம். ஆனால், சைக்கிள் வாங்கவே  இப்படி காத்திருக்க வேண்டும் என்று பலரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். நாட்டின் பல பகுதிகளில், சைக்கிள் வாங்கப்போன பலர், ‘புக்  பண்ணிட்டு போங்க… வந்ததும் சொல்றோம்’’ என்ற கடைக்காரரின் பதிலை கேட்டு அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை.  கொரோனா வந்த பிறகு பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், சைக்கிள் தேவை அதிகரித்து விட்டது. கடந்த சில மாதங்களாகவே,  வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப சைக்கிள்கள் ஸ்டாக் இல்லை என டீலர் பலர் தெரிவித்துள்ளனர். இதனால் உற்பத்தியை அதிகரித்துள்ளதாகவும்  அவர்கள் தெரிவிக்கின்றனர்.  அதிலும், வழக்கமான பழைய மாடல் சைக்கிள்களை விட, நவீன சைக்கிள்களுக்கு டிமாண்ட் 30 முதல் 35 சதவீதம் அதிகரித்துள்ளது என்கின்றனர்.   பிரீமியம் மாடல் சைக்கிள்கள், மின் மோட்டார் பொருத்திய சைக்கிள்களுக்கும் தேவை உயர்ந்துள்ளது என சைக்கிள் நிறுவனங்கள் தரப்பில்  கூறப்படுகிறது.

 அந்த அளவுக்கு டீலர்களிடம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில நகரங்களை தவிர பெரும்பாலான இடங்களில் இதே நிலைதான். எனவே,  அவசர தேவைக்கு பழைய சைக்கிள்கள் வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.  தினசரி அலுவலகங்களுக்கு சென்று வர டூவீலருக்கு மாறிய பலர், சைக்கிளை ஏறக்குறைய மறந்தே போய்விட்டனர். ஆனால், நிலைமை இப்போது  தலைகீழாகிவிட்டது. புதிய மாடல் டூவீலர், கார் போல சைக்கிளுக்கும் முன்பதிவு செய்து விட்டு காத்திருக்கும் காலம் வந்து விட்டது. எல்லாம்  கொரோனா மாயம்தான்.  அருகில் உள்ள இடங்களுக்கு செலவில்லாமல் சென்றுவர முடியும் என்பது மட்டுமல்ல… கொரோனாவில் சும்மா நொறுக்குத்தீனி சாப்பிட்டதால்  அதிகரித்த உடல் எடையை குறைக்கவும் சைக்கிளிங் பயன்படுகிறது என்பது, தேவை அதிகரிப்புக்கான கூடுதல் ரகசியம்.

 அதேநேரத்தில், சைக்கிள் நிறுவனங்களுக்கு இந்த உற்சாகம் நிலைக்குமா என்ற சந்தேகமும் வந்துள்ளது. சைக்கிள் உற்பத்திக்கு தேவையான  மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து வரவில்லை. இதனால் உற்பத்தி பெரும் சவாலாக உள்ளது. அதோடு, இந்த தேவை, பழக்க வழக்கங்களில்  ஏற்பட்ட தற்காலிக மாற்றமாகக்கூட இருக்கலாம். கொேரானாவுக்கு பிறகு வழக்கமாக டூவீலர்கள், கார்கள் பறக்க தொடங்குவதற்கும் அதிக வாய்ப்பு  உள்ளது என்கின்றனர்.

ஓவர் டைமில் இயங்கும் தொழிற்சாலைகள்

* மார்ச் இறுதி மற்றும் ஏப்ரலில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் உற்பத்தியே இல்லை.

* மே மாதத்தில் தொழிற்சாலையின் மொத்த உற்பத்தி திறனில் 33 % மட்டுமே அதிகரித்தது.

* இது ஜூன் மாதத்தில் 63 சதவீதமாகவும், ஜூலையில் 67 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

* தற்போது சைக்கிள் தேவையை ஈடுசெய்ய, லூதியானாவில் உள்ள சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் ஓவர் டைமிங்கில் இயங்குகின்றன.

* ஊரடங்கால் சைக்கிள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: