சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் உடலில் 12 காயங்கள் உள்ளன!: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு!

சென்னை:  சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கரின் உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ரவுடி சங்கரை கஞ்சா வழக்கில் அயனாவரம் போலீசார் கைது செய்தனர். சென்னை நியூ ஆவடி சாலையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து, அதனை எடுத்து செல்லும்போது திடீரென ரவுடி சங்கர் தாக்கியதாகவும், அதனை எதிர்த்து காவல் ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் நடத்திய தற்காப்பு தாக்குதலில் என்கவுண்டர் செய்யப்பட்டகாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் 3 குண்டுகளால் சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு உறவினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். போலீஸ் திட்டமிட்டு தாக்கி சங்கரை கொலை செய்து விட்டதாக கூறி, உடலை வாங்க மறுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தீவிர விசாரணையானது மேற்கொள்ளப்பட வேண்டும் என உறவினர் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில், சங்கரின் தாயார் மனு ஒன்றும் அளித்திருந்தார். அதில், தனது மகனை திட்டமிட்டு போலீசார் கொலை செய்துவிட்டு என்கவுண்டர் என்ற பெயரில் நாடகமாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என கோரி, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட தனிப்படை போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. சங்கரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டது. இந்நிலையில், தற்போது ரவுடி சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சங்கரின் உடலில் 3 குண்டுகளை தவிர, சுமார் 12 காயங்கள் ஆங்காங்கே இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவை காவல் துறையினரிடையே மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் 13 காவலர்களிடம் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, தற்போது கிடைத்துள்ள பிரேத பரிசோதனையின் அடிப்படையிலும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Related Stories: