கொரோனா தடுப்பு நடவடிக்கை!: சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை..!!

சென்னை: வரும் 14ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதால் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரானது 14ம் தேதி தொடங்கவுள்ள சூழ்நிலையில், 72 மணி நேரத்திற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவை சபாநாயகர் தெரிவித்திருந்தார். இதற்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவரவர் மாவட்டங்களிலேயே மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலமாக வீடுகளுக்கே நேரடியாக சென்று சோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனையானது அவரவர் இல்லத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இதேபோல் சட்டப்பேரவை வளாகத்தில் பணிபுரியக்கூடிய பணியாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனையானது தலைமை செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனையானது இன்று நடைபெறவிருக்கிறது. கொரோனா பரவும் சூழலில் சட்டப்பேரவையானது சமூக இடைவெளியை கடைபிடித்து சென் ஜார்ஜ் கோட்டையில் இருக்கக்கூடிய சட்டப்பேரவை வளாகத்தில் நடத்த முடியாத நிலையின் காரணமாகவே கலைவாணர் அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு வரக்கூடிய அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

Related Stories: