மின்னணு முறையில் டிக்கெட் பெரும் பயணிகளுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை அளிக்கும் திட்டம் இன்று முதல் அமல்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..!!

சென்னை: ரயில் பயண டிக்கெட்டுகளை Q.R தொழில்நுட்பத்தில் பெறுவோருக்கு பயண கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் கடந்த மூன்று நாட்களில் 24,354 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7ம் தேதியிலிருந்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கும், அடுத்ததாக பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரலுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் செப்டம்பர் 7 முதல் 9ம் தேதி வரை 24,354 பேரும், புதன்கிழமை மட்டும் 13,980 பேரும் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவற்றில் முக்கியமாக, டிக்கெட் கவுன்ட்டர்கள் முன் வரிசையில் நின்று பயணச்சீட்டுகளை வாங்கும் வழக்கமான நடைமுறையை பயணிகள் கடைப்பிடித்தால் அதுவும் கொரோனா பரவ வாய்ப்பாக அமையலாம் என மெட்ரோ நிர்வாகம் கருதுகிறது. இதன் காரணமாக கவுண்டர்களில் டிக்கெட்டுகளை பயணிகள் பெறுவதற்கு மாற்றாக பயணிகள் தங்களது சுமார்ட் போனில் சி.எம்.ஆர்.எல். எனும் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் Q.R தொழில்நுட்பத்தின் மூலம் தங்களது டிக்கெட்டுகளை பதிவு செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு மின்னணு முறையில் டிக்கெட் பெரும் பயணிகளுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை அளிக்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

Related Stories: