ஓட்டேரி ரவுடி கார்த்திக் பெயரை சொல்லி பெண் வக்கீலுக்கு பகிரங்க மிரட்டல்: போலீசில் புகார்

சென்னை: வீட்டின் முன்பு சைக்கிள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறின்போது, ரவுடி ஓட்டேரி கார்த்திக் பெயரைச் சொல்லி பெண் வக்கீலை வாலிபர் மிரட்டியதாக போலீசில் பரபரப்பு புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம், பிரின்ஸ் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி (37). இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வீட்டு முன் சைக்கிளை நிறுத்தியபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோதி என்பவர், ‘‘இந்த இடம் எங்களுடையது, இங்கு சைக்கிளை நிறுத்தக்கூடாது,’’ என்று சொல்லி விரட்டி இருக்கிறார்.

இதையடுத்து இரவு 10 மணிக்கு நீதிமன்ற பணி முடிந்து வீடு திரும்பிய வக்கீல் மலர்கொடியிடம், நடந்த சம்பவம் குறித்து குழந்தைகள் கூறி அழுதுள்ளனர். இதையடுத்து மலர்கொடி, ‘‘ஏன் குழந்தைகளை திட்டினீர்கள்,’’ என்று கேட்டதற்கு ஜோதியின் மகன் மோசஸ், மலர்கொடியை தகாத வார்த்தைகளில் திட்டியதோடு எனக்கு பெரிய ரவுடிகளை தெரியும். ‘‘முதலில் நான் ரவுடி வீரமணியிடம் டிரைவராக இருந்தேன். இப்போது வெடிகுண்டு புகழ், ஓட்டேரி கார்த்திக் கிட்ட இருக்கேன். உன் வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவேன். ஒரே வெடிகுண்டில் அனைவரையும் காலி செய்து விடுவேன்.

இன்னும் இரண்டு நாளில் இந்த ஏரியாவை விட்டே காலி பண்ணிவிடுவேன்,’’ என்று கூறி மிரட்டியுள்ளார். மேலும் அவரது துப்பட்டாவை பிடித்து இழுத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து மலர்கொடி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஜோதி மற்றும் அவரது மகன் மோசஸ் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இரு நாட்களுக்கு முன்னர்தான், பள்ளிக்கரணை அருகில் உள்ள வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வனஜா தனசேகரன் வீட்டில் வெடிகுண்டுகளை ஓட்டேரி கார்த்திக், ராஜேஷ் ஆகியோர் வீசினர்.

மேலும் ஓட்டேரி கார்த்திக் மீது கொலை வழக்கு, வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கார்த்திக் மீது தொடர்ந்து புகார்கள் வந்தாலும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: