ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிசிடிவி பொருத்தியதில் முறைகேடு: 2018-19ல் ஒதுக்கீடு செய்த நிதியை ஸ்வாகா செய்த அதிகாரிகள்; பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில் சிசிடிவி கேமரா பொருத்தியதில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2018-19ல் ஒதுக்கீடு செய்த நிதியை செலவிடாமல் பங்குபோட்டுக் கொண்டிருப்பதும் வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது. பழைய வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இதயம், கல்லீரல், நரம்பியல், சிறுநீரகம், காது-மூக்கு-தொண்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் உயர் சிகிச்சை பெறுவதற்காக இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இதனால், மருத்துவமனை பாதுகாப்பு கருதி அறுவை சிகிச்சை அரங்கில் மட்டும் ரூ.8.25 லட்சம் செலவில் 27 இடங்களில் அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த சிசிடிவி கேமராவுடன் 1 வருடத்திற்கு, அதன் காட்சிகளை சேமித்து வைக்கும் திறன் கொண்ட ஹார்டு டிஸ்க் வைக்க அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், தரமான கம்பெனி பெயர் கொண்ட சிசிடி கேமரா வாங்காமல் மலிவான விலையில் சிசிடிவி வாங்கி பொருத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 2 கேமரா ரூ.8,500க்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி கேமரா வைக்க ரூ.2 லட்சம் மட்டுமே செலவாகி இருப்பதாக தெரிகிறது.

இதுதொடர்பாக, பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்துக்கு புகார் சென்று இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த புகார் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2018-19ம் நிதியாண்டில் மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கத்தில் சிசிடிவி அமைக்க ரூ.8.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், மருத்துவமனை வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை. இந்த நிதியை அப்படியே அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனத்துடன் இணைந்து பங்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் பொதுப்பணித்துறைக்கு புகார் சென்று உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் உரிய விசாரணை நடத்தினால் உண்மை நிலவரம் வெளிச்சத்துக்கு வரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: