இன்ஜின் கோளாறால் எக்ஸ்பிரஸ் ரயில் திடீர் நிறுத்தம்; பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர் திடீர் மயக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில், 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், அதில் இருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர் மயங்கி விழுந்தார். சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி நோக்கி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. செங்கல்பட்டு அருகே கருங்குழி ரயில்வே கேட் அருகே சென்றபோது, திடீரென இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு, ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், அதனை பின் தொடர்ந்து வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ஒத்திவாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

சுமார் 2 மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால், அதில் இருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். பின்னர் பல்லவன் எக்ஸ்பிரஸ் இன்ஜினில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டு, 2 மணி நேரத்துக்கு பின் புறப்பட்டு சென்றது. இதற்கிடையில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில். பயணிகளின் பாதுகாப்புக்காக வந்த மேத்யூ என்ற வடமாநில் சிஆர்பிஎப் வீரர், மன அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Related Stories: