பூண்டி வட்டார வேளாண்மை மையத்துக்குப் பூட்டு அலுவலகம் கொழுந்தளூர் கிராமத்துக்கு மாற்றம்: விவசாயிகள் அவதி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை, திடீரென பூட்டிவிட்டனர். இந்த அலுவலகத்தை பஸ் வசதி இல்லாத கொழுந்தளூர் கிராமத்துக்கு மாற்றிவிட்டனர். இதனால், விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய அலுவலக வளாகங்களிலும், வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பயிர்களின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு, விவசாயிகளுக்கு தேவையான விதைகள் மற்றும் இதர இடுபொருட்களை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது.

மேலும், அயம்வாம் திட்டத்தின்கீழ் செயல்விளக்க திடல்கள் அமைத்தல் மற்றும் நீர் மேலாண்மை யுக்திகள் செயல்படுத்துதல், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம்,  சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே கூட்டு பண்ணைய ஆர்வத்தை ஊக்குவித்தல்,  உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல் ஆகியவையும் செயல்படுத்தப்படுகிறது. இந்த அலுவலகம் பூண்டி ஒன்றியத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது, இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட 42 ஊராட்சி கிராம விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்தில் பூண்டி செல்ல பஸ் வசதி உள்ளது. இதன்மூலம், பூண்டி வந்து வேளாண் இடுபொருட்கள், விதைகள், உரம் போன்றவற்றை வாங்கிச்சென்றனர்.

இந்நிலையில், இந்த அலுவலகத்தை எவ்வித அறிவிப்பும் இன்றி, பஸ் வசதி இல்லாத கொழுந்தளூர் கிராமத்திற்கு அதிகாரிகள் திடீரென மாற்றிவிட்டனர். இதனால், விவசாயிகள் வேளாண் பொருட்களை வாங்கிச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒன்றியத்தின் மையப்பகுதியான பூண்டிக்கு, அலுவலகத்தை கொண்டுவர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: