பாதுகாப்பு விஷயத்தில் பொதுமக்கள் மெத்தனமாக இருந்தால் கொரோனாவின் 2வது அலை அக்டோபரில் வருவதை யாராலும் தடுக்க முடியாது: அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் எச்சரிக்கை

சென்னை: மக்கள் பாதுகாப்பாக இல்லாவிட்டல் அக்டோபர் மாதத்தில் கொரோனா 2 வது அலை வரும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் ரூ. 97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு தினங்களுக்கு முன்பு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று ஆய்வு செய்தார். மேலும் நகராட்சிக்கு குப்பைகளை அள்ளும் பேட்டரி வாகனங்கள் மற்றும் இரண்டு பூங்காக்களை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ் வளர்ச்சியை பொறுத்தவரை தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து அதிமுக அரசு ஏராளமான பணிகளை செய்து வருகிறது. தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு இன்னும் அதிகமாக உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வரும் தேர்தலில் சாதனைகளின் அடிப்படையில் வாக்குகள் கேட்கப் போகிறோம். நாம் பாதுகாப்பாக இருந்தால் கொரோனா பாதிப்பிலிருந்து தப்ப முடியும். மெத்தனமாக இருந்து விட்டால் அக்டோபரில் கொரோனாவின் இரண்டாவது அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது. கொரோனாவை விரட்டி அடிக்கும் பணியில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்றார். நகராட்சி கமிஷனர் செந்தில்குமரன், பொறியாளர் நளினி, சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

* எம்ஜிஆர் பெயரில் விஜய் ஓட்டு கேட்டால் பிரச்னை

அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் மேலும் கூறுகையில், ‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் அவர்  இருக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் அப்படி போஸ்டர் வைத்துள்ளார்கள். அது வரவேற்கதகுந்த விஷயம் என கருதுகிறேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை  சொல்லி அவர்கள் ஓட்டு கேட்டு போகாத வரை எந்த பிரச்னையும் இல்லை, அவர்களின்  பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் உரிமை எங்களுக்குத் தான் உள்ளது என தெரிவித்தார்.

Related Stories: