பூமி தோன்றி 46 லட்சம் ஆண்டுகள் ஆன நிலையில் உலகில் 50% காடுகள் அழிக்கப்பட்டுள்ளது: எஸ்டிபிசி கூட்டத்தில் தகவல்

சென்னை: மாநில மேம்பாட்டுக்கொள்கை கவுன்சில் (எஸ்டிபிசி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உயிரி பன்மம் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலத்தன்மை குறித்த குழு விவாதம் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தலைப்பில் கருத்தாய்வுக் கூட்டம் காணொளி வாயிலாக நடந்தது. இதில், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் (முன்னாள் மாநிலத் திட்டக் குழு) துணைத் தலைவர் பொன்னையன் தலைமை வகித்தார். இதில் உயிரி பன்மம் சமூக மற்றும் பொருளாதார மதிப்பீடு குறித்து விவாதிக்கப்பட்டது.

நம் பூமி தோன்றி 46 லட்சம் ஆண்டுகள் கடந்த நிலையில் மனிதன் தோன்றி தொழில் துறையில் முன்னேறிய நிலையில், இன்று 50% உலகில் உள்ள அனைத்து காடுகளும் அழிக்கப்பட்டுள்ளது. உலகின் 40% பொருளாதாரம், உயிரியல் செயல்முறைகள் மற்றும் தயாரிப்புக்களைச் சார்ந்துள்ளது. பல்லுயிரிலிருந்து பெறப்படும் மருந்துகளின் தோராய மதிப்பு ரூ.4,340 கோடியாகும். சராசரியாக ஓர் இந்தியன் 69 ஆண்டுகள் வாழ்வதாகக் கணக்கில் கொண்டால் அவன் சுற்றுச்சூழலிலிருந்து பெறும் பிராணவாயுவின் மதிப்பு சுமார் ரூ.72.5 கோடியாகும்.  

தமிழ்நாட்டில் வனப் பரப்பளவு 22,87,700 ஹெக்டேர் உள்ள நிலையில் வனங்கள் மூலம் கிடைக்கும் 17 வகையான பயன்களுக்கு மட்டுமே போடப்படும் மதிப்பு ரூ.57,809 கோடிகள். தமிழ்நாட்டில் மொத்தம் 13,604 உயிர் பன்ம மேலாண்மை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு குழுவிற்கும் ஒன்று என்ற கணக்கும் 13,604 மக்கள் உயிரி பன்ம பதிவேடுகள் நவம்பர் 2019 முதல் ஜனவரி 2020க்குள் தமிழ்நாடு மாநில உயிரி பன்ம வாரியம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் அவைகளைக் களயக் கூடிய வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: