வரும் 14ம் தேதி சட்டப்பேரவை கூடும் நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலாலுடன் முதல்வர் எடப்பாடி திடீர் சந்திப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 14ம் தேதி கூடுகின்ற நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை திடீரென சந்தித்து பேசினார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கினார்.

மேலும், வருகிற 14ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூடும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக கவர்னரை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. அதே நேரம், புதிய கல்வி கொள்கை குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நேற்று முன்தினம் அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்தும் தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் விவாதித்தார் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம்,, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோரும் உடன் இருந்தனர்.

* மொழி பெயர்ப்பு நூல் வெளியீடு

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக முதற்கட்டமாக பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1837 பாடல்களின் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிபெயர்ப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி 19.2.2019 அன்று வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1837 பாடல்களின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றுவெளியிட்டார்.

* அதிநவீன தரவு மையம் திறப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் சென்னை, பெருங்குடி, தமிழ்நாடு மின்னணு நிறுவன வளாகத்தில் ரூ.74 கோடியே 69 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது அதிநவீன மாநில தரவு மையத்தை வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேற்று முன்தினம் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாட்டிற்கான சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு  திட்டத்தினை செயல்படுத்திடும் விதமாக, முதற்கட்டமாக CERT-TN-ன் https://cert.tn.gov.in என்ற இணைய தளத்தையும் துவக்கி வைத்தார்.

Related Stories: