சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு முடிவு தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும்: 16ம் தேதி துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை 3 நாட்கள் மட்டுமே நடத்துவது குறித்து சபாநாயகர் தனபால் தலைமையில் நேற்று நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வரும் 16ம் தேதி துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 14ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு சென்னை, வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடக்கிறது.

சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய நேற்று காலை 11 மணிக்கு சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், கொறடா சக்கரபாணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முக்கியமாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். துணை பட்ஜெட் எந்த தேதியில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

* கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் தனபால் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் மட்டுமே அதாவது 14, 15, 16 ஆகிய தேதிகளில் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் (14ம் தேதி) கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன், வசந்தகுமார் எம்பி மற்றும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் ஒத்திவைக்கப்படும். 15ம் தேதி (செவ்வாய்) அரசினர் அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்படும். 16ம் தேதி (புதன்) முதல் துணை நிதிநிலை அறிக்கை (துணை பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டு விவாதம் இன்றி நிறைவேற்றப்படும். தொடர்ந்து சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும். 15 மற்றும் 16ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் வழக்கம்போல் கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

* சம்பிரதாய கூட்டம்: திமுக குற்றச்சாட்டு

அலுவல் ஆய்வு கூட்டம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறும்போது, “புதிய கல்வி கொள்கை, இந்தி ஆதிக்கம், கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேரவையில் பேச வேண்டும். அதனால் குறைந்தபட்சம் 7 நாட்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைத்தோம். ஆனால், சபாநாயகர் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் ஏற்கனவே முடிவு செய்தபடி 3 நாட்கள் மட்டுமே நடத்த முடியும் என்று சபாநாயகர் கூறி விட்டார். அதிலும் ஒருநாள் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல். அடுத்து துணை பட்ஜெட், புதிய மசோதா என இதற்கே 3 நாள் சரியாகி விடும். ஏதோ 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காகவே கூட்டம் நடத்தப்படுகிறது” என்றார்.

* பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆகும். பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். கூட்டம் நடைபெறும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.

Related Stories: