குற்ற வழக்கில் விடுதலையானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் விடுதலையானவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது தவறில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் திருச்சி காவல் துறையில் சார்பு ஆய்வாளராக 1996-ல் பணியில் சேர்ந்தார். பின்னர் விருதுநகர் மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். மீண்டும் திருச்சிக்கு மாற்றப்பட்டு மதுவிலக்கு பிரிவில் பணிபுரிந்தார். இந்நிலையில் சுரேஷ்குமார் மீது லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு காரணமாக சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் 21.5.2004-ல் உத்தரவிட்டார்.

இதனிடையே 13 ஆண்டு களுக்குப் பிறகு லஞ்ச வழக்கில் இருந்து சுரேஷ்குமாரை விடுதலை செய்து நீதிமன்றம் 28.11.2017-ல் தீர்ப்பளித்தது. இருப்பினும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்து 6.12.2019-ல் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. குற்றச்சாட்டு குறிப்பாணை, பணியிடை நீக்கம் ஆகியவற்றை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் சேர்த்து பணி மூப்பு மற்றும் அனைத்து பணப் பலன்களையும் வழங்கக் கோரி சுரேஷ்குமார் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், குற்ற வழக்கில் முழுமையாக விசாரணை முடிக்கப்பட்டு மனுதாரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு 2 ஆண்டுகள் கழித்து குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. குற்ற வழக்கில் விடுதலையாகும் நபர்கள் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளக் கூடாது என காவல் நிலையாணை 67-ல் கூறப்பட்டுள்ளது. இதனால் குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு; குற்ற வழக்கில் விடுதலையாகும் நபர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளக் கூடாது எனக் காவல் நிலையாணையில் கூறியிருப்பது எல்லா வழக்கு களுக்கும் பொருந்தாது.  சில வழக்குகளில் அரசு தரப்பு குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிய தால் விடுதலையாகியிருக்கலாம்.

சில வழக்குகளில் நீதிமன்றத்தில் விடுதலையான பிறகும், துறை ரீதியான விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபணமாக வாய்ப்புள்ளது. மேலும் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்க ஏற்பட்ட 2 ஆண்டு தாமதம் ஏற்கக்கூடிய தாமதம் தான். எனவே, மனுதாரரின் பணியிடை நீக்க உத்தரவையும், குற்றச்சாட்டுக் குறிப்பாணையையும் இப்போது ரத்து செய்ய முடியாது. அதே நேரத்தில் மனுதாரர் 2014-ல் இருந்து பணியிடை நீக்கத்தில் உள்ளார். இதனால் அவர் மீதான துறை ரீதியான நடவடிக்கையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும். 3 மாதத்தில் துறை ரீதியான விசாரணை முடியாவிட்டால் மனுதாரரை தொடர்ந்து பணியிடை நீக்கத்தில் வைத்திருக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories: