வத்தலகுண்டு அருகே மழை நீரை சேமிக்க ரூ.4.5 லட்சம் செலவில் புதிய குளம் அமைப்பு: விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு குவியும் பாராட்டுகள்..!!!

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கூவம்பட்டி கிராமத்தில் வெட்டப்பட்ட புதிய குளத்தில், மழை நீர் நிரம்பி வருவதால் கிராம மக்கள் மிகுந்த மகழ்ச்சியடைந்துள்ளனர். மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். மேலும் வீடுகள், நிறுவனங்களின் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இந்த திட்டத்தினை செயல்படுத்தலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் குளங்களிலோ, கிணற்றிலோ மழை நீரை சேமித்து வைக்கலாம்.

அவை வறட்சியான காலகட்டத்தில் குடிநீருக்கான முக்கிய ஆதாரமாகப் விளங்கும். இதனால் அனைவரும் இந்த வழிமுறைகளை பின்பற்றி நீர் தட்டுப்பாட்டினை குறைக்கலாம். தற்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஊராட்சி மன்ற தலைவர் இந்த திட்டத்தினை திறன்பட செயல்படுத்தியுள்ளார். அதாவது திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி ஊராட்சியில் 11 கிராமங்களில் ஏராளமான குளம் உள்ளது. இந்நிலையில் கூவம்பட்டி கிராமத்தில் மட்டும் குளம் ஏதும் இல்லை. இதனால் மழை காலங்களில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில், விராலிப்பட்டி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் ஆகியோர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.4.5 லட்சம் மதிப்பில் புதிய குளம் ஒன்றை கூவம்பட்டி கிராமத்தில் வெட்ட ஏற்பாடு செய்தனர். இதன் பின்னர், கூவம்பட்டியில் குளம் தோண்டி முடித்த அடுத்த நாளே நல்ல கனமழை பெய்தது. இதனால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவரின் புதிய முயற்சிக்கு அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: