ரத்த தான முகாம், பிளாஸ்மா தானம்.. பிரதமர் மோடியின் 70-வது பிறந்த தினத்தையொட்டி மக்கள் நல பணிகளுக்கு பாஜக ஏற்பாடு!!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த தினம் வருகிற 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பிளாஸ்மா தானம் உள்ளிட்ட மக்கள் நல பணிகளுக்கு பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம், வாத்நகரில், 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி, தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி, ஹிரான் பென் மோடி தம்பதியரின் 3-வது மகனாக பிறந்தார். பிரதமர்  நரேந்திர மோடி, 2014ல் பிரதமராக பதவியேற்றதில் இருந்தே, ஒவ்வோர் ஆண்டும், அவரது பிறந்த நாளை, பா.ஜ.,வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அன்றைய தினம், பிரதமர் குஜராத்திற்கு சென்று, அங்கு தன் தாயாரிடம், ஆசி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, வரும் செப்டம்பர், 17ம் தேதி, 70வது பிறந்தநாள் வரவுள்ளது. 60 ஆண்டுகளை முடித்து, 70வது ஆண்டிற்குள், பிரதமர் செல்வதை முன்னிட்டு, இந்த ஆண்டு, அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட, பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, பிரதமர் மோடியின் 70-வது பிறந்த தினத்தையொட்டி, பல வார கொண்டாட்டங்களுக்கு பாரதீய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மறுஅமர்வு வருகிற 14-ந் தேதி தொடங்கி, அக்டோபர் 2-ந் தேதி முடிவடைகிறது. இந்த காலகட்டம் முழுவதுமே பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கொண்டாட்டங்களின்போது, பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரசாரம், துணியால் தயாரிக்கப்பட்ட பைகளை வினியோகித்தல், ரத்த தான முகாம், இலவச கண் சிகிச்சை முகாம், மூக்கு கண்ணாடிகள் வழங்கும் முகாம், பிளாஸ்மா தானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மோடியின் பிறந்த நாள் விழா குறித்து பேசிய அரியானா மாநில பா.ஜ.க. தலைவர் ஓம் பிரகாஷ் தங்கர்,பிரதமர் மோடி பிறந்த தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டுகோள் விடுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள் என்று மக்களை கேட்போம். அதற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துமாறு கூறுவோம். இலவச கண் பரிசோதனை முகாம், ரத்த தான முகாம் போன்றவையும் நடத்தப்படும், என கூறினார்.

Related Stories: