ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாகாண்யம் ஏரியில் மண் கொள்ளை: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாகாண்யம் எரியில் மண் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாகாண்யம் ஊராட்சியில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் 3மதகு, கலங்கல் உள்ளன. மேலும் அதே பகுதியில் உள்ள சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது இந்த ஏரி கரை, மதகு, கலங்கல் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இந்த ஏரியை சீரமைக்க குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ 48 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டது. தற்போது ஏரியில் இருந்து மண் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது; மாகாண்யம் ஏரி மதகு, கலங்கல், கரை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து மண் எடுத்து கரையை பலபடுத்த வேண்டும். ஆனால் தற்போது ஏரியை சீரமைக்க கான்ட்ராக்ட் எடுத்துள்ளவர்கள், ஏரியில் இருந்து மண் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மேலும் ஒரு டிராக்டர் மண் ரூ. 800க்கும், ஒரு லாரிக்கு ரூ. 3000 வீதம் மண் விற்பனை செய்து பல லட்சங்கள் வசூலித்து வருகின்றனர். எனவே ஏரி சீரமைப்பு என்ற பெயரில் மண் விற்பனை செய்வபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: