ஆணையர் அறிவிப்புக்கு காத்திருப்பதால் கோயில்களில் அன்னதானம் எப்போது?... அதிகாரிகள், பக்தர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: கமிஷனர் அலுவலகத்தில் அறிவிப்பு வராததால் கோயில்களில் அன்னதானம் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஊரடங்கால் அனைத்து கோயில்களிலும் ல அன்னதான திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக அன்னதான திட்டத்தின் கீழ் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கடந்த மார்ச் 31ம் தேதி வரை உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், அதன்பிறகு கோயில் நிர்வாகம் சார்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் செப்.1ம் தேதி முதல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டது. அதில் கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு உணவுகளை பொட்டலமாக தரலாம் என்று வழிகாட்டி நெறிமுறையில் அரசு தெரிவித்துள்ளது.

இக்கோயில்களில் பக்தர்களும் அரசின் வழிகாட்டி நெறிமுறையை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கோயில்கள் திறக்கப்பட்டு 5 நாட்களுக்கும் மேலான நிலையில் அன்னதானம் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து முறையான அறிவிப்பு வரவில்லை. என்று கூறப்படுகிறது. இதனால், அன்னதான திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவாதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் அதிகாரிகள் உள்ளனர். இதன் காரணமாக தற்போது வரை கோயில்களில் அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: