இலவச மின்சாரம் பெறும் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் மின்சார இணைப்பு

* தமிழக அரசு புதிய திட்டம்

* ரூ2,700 கோடி மிச்சமாகும்

சென்னை: இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு வழக்கமான மின்சாரத்துக்கு பதிலாக சோலார் மின்சாரத்துக்கான இணைப்பை இலவசமாக வழங்க தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. தமிழகம் முழுவதும் விவசாயத்திற்காக 21.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் இருந்து அரசு ஒரு யூனிட்டுக்கு ரூ8.26 விலையில் வாங்குகிறது. இந்த செலவினத்தை குறைத்து அதன் மூலம் ரூ2700 கோடி செலவை மிச்சப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இலவச மின்சாரம் வழங்கும் இணைப்புகளை சூரிய மின்சார இணைப்புகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிஷான் உர்சா சுரக்க்ஷா ஏவாம் உத்தம் மகாகபியான் என்ற திட்டத்தின் மூலம் சூரிய மின் வசதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவில் மத்திய, மாநில அரசுகள் தலா 30 சதவீதத்தையும், தமிழ்நாடு மின் வளர்ச்சி ஏஜென்சியும் பகிர்ந்துகொள்ளவுள்ளன. இதன் மூலம் 11 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும். மின் இணைப்பு பெறும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு விற்பனை செய்யலாம். மற்றவர்களுக்கும் விற்பனை செய்ய முடியும். இந்த திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் சூரிய மின் சக்தி பேனல் சுமார் 25 ஆண்டுகள் பயன்தரும் வகையில் அமைக்கப்படும்.

இந்த திட்டத்தின்மூலம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 20 ஆயிரம் கம்பிவட மின் இணைப்புகள் சூரிய மின் சக்திக்கு மாற்றப்படும். இந்த சூரிய இணைப்பு முழுவதும் இலவசமாக வழங்கப்படும். இதனால், தற்போது தமிழக அரசு இலவச மின்சாரத்திற்காக விவசாயிகளுக்கு வழங்கும் ரூ4 ஆயிரம் கோடி மிச்சமாகும். இது தொடர்பாக மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த திட்டம் 5 ஆண்டுகள் தாக்குப்பிடித்துவிட்டால் சூரிய மின் சக்தி திட்டத்தை பெரிய அளவில் செய்ய முடியும் என்றார்.

Related Stories: