சென்னையில் நாளை முதல் மின்சார ரயில் இயக்கப்படுமா? தெற்கு ரயில்வே பிஆர்ஓ தகவல்

சென்னை: சென்னையில் நாளை முதல் மின்சார ரயில் சேவை இயக்கப்படுமா என்பதற்கு தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை மார்ச் 25ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் பொது போக்குவரத்து நாளை முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி தென்மாவட்டங்களுக்கு 13 சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இதற்கிடையில் நாளை முதல்கட்டமாக சென்னை கடற்கரை- செங்கல்பட்டுக்கும், மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம், ஆவடிக்கும், மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு 73க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் நாளை முதல் இயக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இது குறித்து தெற்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி குகணேசன் வெளியிட்ட அறிக்கையில்: மின்சார ரயில்களை இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே அதிகார பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தகவல் அனைத்தும் முற்றிலும் தவறானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது தற்போது எந்த விதமான ரயில்களும் இயக்கப்படவில்லை. மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சிரமமானது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பிறகு கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பின் தான் புறநகர் மின்சார ரயில்களை இயக்க முடியும். மேலும் இந்த மாதம் 15ம் தேதி அல்லது செப்டம்பர் 30ம் தேதி ஊரடங்கு முடிந்த பிறகு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி மின்சார ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

Related Stories: