தமிழகத்தில் 9 ஆயிரம் பேர் மீது வழக்கு; பிரதமரின் கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி: சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை

* விவசாயம், வருவாய்த்துறை கூட்டு சதி அம்பலம்

சென்னை: பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் தமிழகத்தில் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக 9 மாவட்டங்களில் தலா ஆயிரம் பேர் வீதம் 9 ஆயிரம் பேர் மீது சிபிசிஐடி போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். வருவாய்துறை, வேளாண் துறை அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மோசடி செய்த பணத்தை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வேளாண்துறை மூலம் செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளை விவசாயி என்ற போர்வையில் போலி ஆவணங்கள் மூலம் இணைத்து கோடிக்கணக்கில் தமிழகம் முழுவதும் மோசடி செய்துள்ளனர். அதில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் என 9க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட ேவளாண்துறை இணை இயக்குநர்கள் சிபிசிஐடி போலீசில் புகார் அளித்தனர். அதன்படி சிபிசிஐடி டிஜிபி பிரதீப் பிலிப், ஐஜி சங்கர் ஆகியோரது மேற்பார்வையில் எஸ்பிக்கள் விஜயகுமார், சிபிசக்கரவர்த்தி ஆகியோர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படைகள் 9 மாவட்டங்களில் முகாமிட்டு விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் தனியார் கணினி மையங்களில் பயனாளிகள் பெயர் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டதில், போலியாக ஆவணங்களை இணைத்து வெவ்வேறு மாவட்டங்களில் விவசாயம் செய்வதாக பதிவிட்டு, மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதனால், மோசடியில் ஈடுபட்ட வேளாண், வருவாய்துறை அதிகாரிகள், அலுவலர்கள், கடைநிலை ஊழியர்கள், கணினி மைய ஆபரேட்டர்களை குறித்து பட்டியல் தயார் செய்து வருகின்றனர். மேலும், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட முதல் தவணை தொகையான ரூ2 ஆயிரத்தை எடுக்கவிடாமல், வங்கி மூலம் முடக்கி வைத்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள், புரோக்கர்கள் என ஆயிரம் பேர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அவர்கள் அனைவர் மீதும் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக 9 மாவட்டங்களில் 9 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரம் பேர் வீதம், 9 ஆயிரம் பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 22 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், சுமார் ரூ18 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் அதிகாரிகள் குழுவை நியமித்து விசாரணையை கலெக்டர் கந்தசாமி தீவிரப்படுத்தியிருக்கிறார்.

அதன்படி, அரசின் நிதியுதவி பெற்ற 32,200 போலி விவசாயிகளின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுளளதாகவும், நேற்று வரை சுமார் ரூ2.65 கோடி திரும்பப் பெற்றிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், இடைத்தரகராக செயல்பட்ட மகளிர் சுய உதவிக்குழு தலைவி ஜீவா என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், 7 இ-சேவை மைய ஊழியர்கள் உள்ளிட்ட 34 நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில், மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

இதுகுறித்து, சிபிசிஐடி தரப்பில், இந்த ஊழலில் கடைசி நிலையில் செயல்பட்டவர்களிடம் இருந்து

விசாரணையை தொடங்கி இருக்கிறோம். அவர்களிடம் இருந்து உரிய ஆதாரங்களை சேகரித்துள்ளோம். எனவே, விரைவில், முக்கிய நபர்கள் சிக்குவார்கள் என்றனர். இதனால் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சேலத்தில் 14 ஆயிரம் பேர்  கணக்கு முடக்கம்:  சேலம் மாவட்டத்தில் பயன்பெற்றுள்ள விவசாயிகள் பட்டியலை ஆய்வு செய்திட கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இதன்பேரில், வேளாண் துறை, வங்கி அதிகாரிகள் கொண்ட குழு தீவிர கள ஆய்வில் ஈடுபட்டுள்ளது. அதில், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் முறைகேடாக பயனாளிகள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் 14 ஆயிரம் பேர், முறைகேடாக பதிவு செய்து, உதவித்தொகை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதில், 8 ஆயிரம் பேர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பெத்தநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ராஜா என்ற தற்காலிக ஊழியரை டிஸ்மிஸ் செய்துள்ளனர். மேலும், கிசான் உதவித்தொகை பெற்ற 14 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் நேரடி விசாரணை நடத்தி, உண்மை நிலை அறிந்தே பணத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக பயனாளியாக சேர்ந்தவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மாற்றம்: இந்நிலையில், கிசான் மோசடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், உயர் மட்ட அளவில் விசாரணை தொடங்கியுள்ளது. அதில், முதல் கட்டமாக சில அதிகாரிகளை இடம் மாற்றும் பணியை வேளாண்மைத்துறை மேற்கொண்டுள்ளது. சேலம், பெரம்பலூர், திருச்சி, நாகை ஆகிய 4 மாவட்டத்தில் இணை இயக்குநர்களாக பணியாற்றி வரும் உயர் அதிகாரிகளை நேற்று அதிரடியாக பணியிடம் மாற்றி வேளாண்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கணேசன், சேலம் மாவட்டத்திற்கும், இங்கு பணியாற்றிய இணை இயக்குநர் இளங்கோவன் திருச்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல், திருச்சி மாவட்ட இணை இயக்குநர் பெரியகருப்பன், நாகை மாவட்டத்திற்கும், அங்கிருந்த இணை இயக்குநர் கருணாநிதி பெரம்பலூர் மாவட்டத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். இது வேளாண்துறை அதிகாரிகள், அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் அருகே கூட்டுறவு சங்க தலைவர் உட்பட 6 பேர் கைது

கடலூர் மாவட்டத்தில் மட்டும் கிசான் திட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்ட சுமார் 40 ஆயிரம் பேர் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதோடு, அவர்களின் கணக்கில் இருந்து சுமார் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல கடலூர் மாவட்ட பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சிபிசிஐடி போலீசார் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் நேற்று விசாரணை நடத்தினர். அங்கு கணினி மையம் நடத்தி வரும் மாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரான ஆராமுதன், போலி விவசாயிகளான வெண்ணிலா, அரங்கநாதன், மனோகரன், அருள்குமார், ராஜசேகர் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டம் மூலம் 3 தவணைகளாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

* காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் என 9க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது. மோசடியாளர்களை படிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

Related Stories: