திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்: பக்தர்கள் பங்கேற்க தடை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்க  அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செப்.6ம் தேதி முதல்  ஆன்லைனில் முன்பதிவு மூலமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை  இலவச மற்றும் ரூ.100 கட்டணத்தில் தினமும் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இக்கோயிலில் பிரசித்திப் பெற்ற ஆவணி திருவிழா,  நாளை (6ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்.17ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் பிரகாரத்தில் வைத்து நடைபெறும். சுவாமி வீதி உலா நடைபெறாது.  விழாவில் பங்கேற்க பக்தர்கள் மற்றும் உபயதாரர்களுக்கு அனுமதியில்லை.  முக்கிய திருவிழாவான செப்.12ம் தேதி 7ம் திருவிழா மற்றும் 13ம் தேதி 8ம் திருவிழா ஆகிய இரு நாட்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு  பக்தர்களுக்கு அனுமதியில்லை. மற்ற நாட்களில் திருவிழா நிகழ்வுகள் நீங்கலான இடைபட்ட நேரங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். முக்கிய விழாக்களான  கொடியேற்றம், 5ம் திருநாள் குடவருவாயில் தீபாராதனை, 7 மற்றும் 8ம் திருவிழா சுவாமி சண்முகர் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் பக்தர்கள்  வசதிக்காக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: