5 மாதங்களுக்கு பிறகு எஸ்இடிசி பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவக்கம்: நீண்ட தூரம் பயணிப்போர் நிம்மதி

சென்னை: தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு ‘எஸ்இடிசி’ பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கியது. தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் (எஸ்இடிசி) சார்பில் ஏசி, அல்ட்ரா டீலக்ஸ், டீலகஸ், ஏசி சிலிப்பர் சீட்டர் உள்ளிட்ட பிரிவுகளில் நாள்தோறும் 1,200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகள் சென்னை-திருச்சி, சேலம், மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில், ஊட்டி, பெங்களூரு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களுக்கு பயணிகளை அழைத்துச்செல்கின்றன. கொரோனா ஊரடங்கால் பஸ் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.20 முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என கடந்த 30ம் தேதி அரசு அறிவித்தது.

அதன்படி மாவட்டத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை இல்லாததால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகளையும் இயக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அரசு கடந்த 2ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘தமிழ்நாட்டில் தற்போது மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர பொதுமக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டுநடைமுறைகளை பின்பற்றி, வரும் 7ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது’ என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, வரும் 6ம் தேதி நள்ளிரவு முதல், எஸ்இடிசி (அரசு விரைவு போக்குவரத்துக்கழகம்) பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதற்கான முன்பதிவு நேற்று துவங்கியது. பலரும் ஆன்லைன் மூலமாகவும் ஆங்காங்குள்ள விரைவுப்போக்குவரத்துக்கழக முன்பதிவு மையங்களுக்கு நேரடியாக சென்றும் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் 5 மாதங்களுக்கு பிறகு நீண்ட தூர பேருந்துகள் இயக்கப்படுவதால் பலரும் நிம்மதியடைந்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயணம் செய்ய விரும்புவோர், www.tnstc.in என்ற இணையதளத்தின் வழியாகவும், tnstc என்னும் மொபைல் ஆப் வழியாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள எஸ்இடிசி முன்பதிவு மையங்களுக்கு சென்று நேரடியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில், ஏ.சி பஸ் சேவை மட்டும் கிடையாது. ஒரு பஸ்சுக்கு, 26 பேரை மட்டுமே ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக 1,200க்கும் மேற்பட்ட பஸ்கள் தினசரி இயக்கப்படும்.

ஆனால் தற்போது 400 பஸ்கள் மட்டுமே முதற்கட்டமாக இயக்கப்படுகிறது. அதன்பிறகு பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். மேலும் ஓட்டுனர், நடத்துனர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கையுறை, முகக்கவசம் அணிந்து, பஸ்களை இயக்குவார்கள். பயணிகளும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

Related Stories: