வேடந்தாங்கல் சரணாலயம், விவசாய நிலங்களில் கழிவுநீர் கலப்பு ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதம் அவகாசம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: வேடந்தாங்கல் சரணாலய பகுதிகளில் கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பது மற்றும் விவசாய நிலங்களில் கலப்பது தொடர்பாக ஆய்வுக்குழு இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய 2 மாதம் அவகாசம் வழங்கி, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மீனவர் நலச்சங்கம் சார்பில் கே.ஆர்.செல்வராஜ்குமார், ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு மிக அருகில் மதுராந்தகத்தை அடுத்த சாத்தம்மை கிராமத்தில் தனியார் மருந்து நிறுவனம் செயல்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் சரணாலய பகுதியில் உள்ள நீர்நிலைகளிலும், அருகில் உள்ள விவசாய நிலங்களிலும் கலக்கிறது. இதனால், வேடந்தாங்கல் சரணலாயத்துக்கு வரும் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அந்த பகுதியில் மருந்து நிறுவனம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த தீர்ப்பாயம், பல்துறை அதிகாரிகளை கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது. மேலும், இக்குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆய்வுக்குழு சார்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருந்து நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சரணாலய பகுதியில் உள்ள நீர்நிலைகள், வேடந்தாங்கல் ஏரி மற்றும் விவசாய நிலங்களில் கலக்கிறதா என்பதை கண்டறிய மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இந்த முடிவு கிடைத்ததும், வேடந்தாங்கல் சரணாலய பகுதியில் நீர் மற்றும் மண்ணின் தரம் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மதிப்பிடவும், அதை தொடர்ந்து, இந்த பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. இந்த பணிகளை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதை ஏற்று கொண்ட தீர்ப்பாயம், 2 மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

Related Stories: