காசநோய்க்கு தொடர் சிகிச்சை இருப்பிடங்களுக்கே சென்று 52,489 நோயாளிகளுக்கு மருந்து: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு காலத்தில் 52,489 காச நோயாளிகளுக்கு அவர்களின் சிகிச்சை காலம் முழுவதற்கும் தேவைப்படும் காசநோய் மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட வேளைகளில் காசநோயாளிகளுக்கு சிகிச்சை, மருந்து மாத்திரைகள், கண்காணிப்பு ஆகியவை எவ்வித சுணக்கமும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் காசநோய்க்காக வெளிநோயாளிகளாக தொடர் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு காசநோய்க்கான மருந்து மாத்திரைகள் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கி தங்கு தடையின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 50,038 காசநோயாளிகளுக்கும், 2,451 பன் மருந்து எதிர்ப்பு காசநோயாளிகளுக்கும் என மொத்தம் 52,489 காசநோயாளிகளுக்கு அவர்களின் சிகிச்சை காலம் முழுவதற்கும் தேவைப்படும் காசநோய் மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சிகிச்சை நெறிமுறைகளின்படி அவர்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் ஊடுகதிர் கருவிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டு தொலைபேசி வாயிலாக சிகிச்சைக்கான மருந்துகளை உரிய வகையில் உட்கொள்வது, பக்கவிளைவுகள், காசநோயின் தன்மை போன்றவைகள் குறித்து கேட்டறிந்து தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காசநோயாளிகள் சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும். அதற்காக தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் சத்து நிறைந்த உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் அரசால் வழங்கப்பட்டு சத்தான உணவு கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: