கொரோனா முடிந்து இயல்பு நிலை வந்தவுடன் 500 ரயில்கள் நிறுத்தப்படும்: ரயில்வே திட்டம்

சென்னை: இந்திய ரயில்வே முடிவு செய்துள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் (பூஜ்ய அடிப்படையிலான கால அட்டவணை) ரயில்வே ஆண்டு வருவாயை ரூ.1,500 கோடிக்கு மேல் அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி புதிய கால அட்டவணையில் 15 சதவிகிதம் கூடுதலாக சரக்கு ரயில்கள் பிரத்தியேக தடங்களில் இயக்கப்படும். பயணிகள் ரயில்களின் சராசரி வேகம் 10 சதவீதம் வரை அதிகரிக்கும். இந்த திட்டத்துக்காக இந்திய ரயில்வே ஐ.ஐ.டி. மும்பை கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதாவது, ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகளுடன் இயங்கும் ரயில்கள் இனி இயக்கப்படாது. தேவைப்பட்டால் அந்த ரயில்கள் பிரபலமான ரயில்களுடன் இணைக்கப்படும். 500 ரயில்களின் சேவை நிறுத்த வாய்ப்பு உள்ளது.

நீண்ட தூர ரயில் பயணங்களில், முக்கிய நகரங்கள் அல்லது இடங்கள் இல்லாதபட்சத்தில், 200 கி.மீக்கு இடையே எந்த நிறுத்தமும் இருக்காது. இந்த நெட்வொர்க்கில் சுமார் 10 ஆயிரம் நிறுத்தங்கள் பட்டியலிடப்பட்டு நீக்கப்படும். ஆனால் அனைத்து ரயில்களும் அங்கே நிற்காது என்று கூற முடியாது. சில உள்ளூர் ரயில்கள் அதன் சேவைகளை அந்த நிறுத்தங்களில் தொடரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். புறநகர் ரயில்சேவைகளில் எந்த மாற்றமும் இல்லாததால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த பணிகள் அனைத்தும் அதன் இறுதி கட்டத்தில் உள்ளது, மேலும் ஐ.ஐ.டி-மும்பை வல்லுநர்கள் ரயில்வேயின் செயல்பாட்டு நிபுணர்களுடன் இணைந்து மாதிரிகளை உருவாக்கி வருகின்றனர். அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோவிட் -19 நிலைமையைப் பொறுத்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கால அட்டவணையை வெளியிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: