பினாமி நிறுவனம் பெயரில் சசிகலா வாங்கிய போயஸ் கார்டனில் பங்களாவுடன் கூடிய 22,460 சதுரஅடியிலான சொத்து முடக்கம்: வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: சசிகலா பினாமி பெயரில் போயஸ் கார்டனில் வாங்கிய பல கோடி மதிப்புள்ள 9 கிரவுண்ட் 860 சதுர அடி கட்டிடம் மற்றும் இடத்தை வருமான வரித்துறை முடக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 1996ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையில் வருமான வரித்துறையும் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம் 4 பேரையும் விடுதலை செய்தது.

இதை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், லஞ்ச ஒழிப்புத்துறை, சிறப்பு நீதிமன்ற சிறப்பு வக்கீல் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கு விசாரணை இறுதி கட்டத்தில் இருக்கும்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது. கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும், சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராத தொகையை செலுத்த வேண்டும் என்றும் சசிகலா உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சசிகலாவுக்கு சொந்தமான இடம் என பல இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் 187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 1,400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். குறிப்பாக, ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம், தாம்பரம் அருகே மிடாஸ் மதுபான ஆலை, ஸ்பெக்ட்ரம் மால் மற்றும்  சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா வீடுகள் என 187 இடங்களில் சோதனை நடந்தது.

ஒரு வாரத்திற்கு மேல் நீடித்த இந்த சோதனையில் கணக்கில் வராத பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள், வங்கி கணக்குகள், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாங்கி குவிக்கப்பட்ட அசையா சொத்துக்கள், போலி பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனங்களின் ஆவணங்கள் அனைத்து பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு மேல் கணக்காய்வு செய்தனர். அந்த கணக்காய்வில் சுமார் ₹4,500 கோடிக்கு  சொத்துக்கள் கண்டறியப்பட்டது. அதில், பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால், சென்னையில் உள்ள கங்கா பவுண்டேசன், கோயம்பத்தூர் செந்தில் பேப்பர் நிறுவனம், புதுச்ேசரி மாநிலத்தில் ஸ்ரீ லட்சுமி ஜூவல்லரிக்கு சொந்தமான ரிசார்ட் என மொத்தம் ரூ.1600 கோடி மதிப்பில் சொத்துகளை பினாமி பேரில் வாங்கி குவித்து தெரியவந்தது.

இதனையடுத்து வருமானவரித்துறை அந்த சொத்துகளை முடக்கியது. இந்தநிலையில், தற்போது சிறையில் இருக்கும் சசிகலா, தண்டனை முடிந்து இன்னும் சில மாதங்களில் வெளியே வரப்போவதாக கூறப்படுகிறது. அப்போது அவர் வந்ததும் தங்குவதற்காக போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் அருகே பங்களா ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சசிகலா கடந்த 2003-2005ம் ஆண்டுகளில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பினாமி பெயரில் ஏராளமான சொத்துக்கள் வாங்கியிருப்பது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில், ஆலந்தூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்பத்தூர், போயஸ் கார்டனில் 24 ஆயிரம் சதுரடியில் உள்ள பங்களா என ரூ.300 கோடி மதிப்பில் 65 சொத்துகள் 200 ஏக்கரில் பினாமிகளின் பெயரிகளில் சசிகலா வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது.

அதில் ஒரு முக்கிய சொத்தான போயஸ் கார்டனில் உள்ள 9 கிரவுண்ட் 860 சதுர அடி அளவு கொண்ட (22,460 சதுர அடி) கட்டிடம் மற்றும் காலி இடத்தை தெலங்கான மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் அங்கட்பேட் என்று இடத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஸ்ரீ ஹரி சந்திரா எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் சசிகலா வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. விசாரணையில் சசிகலாவின் பினாமி நிறுவனமான ஸ்ரீ ஹரி சந்திரா எஸ்டேட் பிரைவேட் லிமிட் ஐதராபாத்தில் பதிவு செய்யப்படுள்ளது என்றும் இந்த நிறுவனம் கலியபெருமாள் மற்றும் சிவக்குமார் பெயர்களில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் விசாரணையில் இவர்கள் சசிகலாவின் பினாமி என்பதும். இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டதிலிருந்து இதன் பெயரில் எந்த வருமானமும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், வருமான வரித்துறையின் அனைத்து விசாரணைகளும் முடித்த பிறகு பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், சசிகலா பினாமி பெயர்களில் வாங்கி குவித்துள்ள ரூ.300 கோடி மதிப்பு, 200 ஏக்கர் 65 சொத்துகளை வருமான வரித்துறை தற்போது முடக்கியுள்ளது. முக்கியமாக போயஸ் கார்டனில் ஸ்ரீ ஹரி சந்திரா எஸ்டேட் பெயரில் வாங்கியுள்ள கட்டிடத்துடன் கூடிய (22,460 சதுர அடி) இடத்தை வருமான வரித்துறை முடக்கம் செய்து அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் பிரிவு 24(3)ன் கீழ் பினாமி சொத்துக்களை முடக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ ஹரி சந்திரா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, ராயப்பேட்டையில் உள்ள சார் பதிவாளர் ஆகியோருக்கு வருமான வரித்துறை துணை ஆணையர் (பினாமி தடுப்பு பிரிவு) யு.என்.திலீப் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில் வருமான வரித்துறை விளக்கம் கேட்டு பினாமிதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட ஆகஸ்ட் 28ம் தேதியிலிருந்து 90 நாட்கள் சம்மந்தப்பட்ட சொத்துக்குள் யாரும் நுழையவோ, சொத்தின் மீது பயன் பெறவோ, அந்த சொத்தின் மூலம் வருமானம் பெறுவதோ சொத்தை வேறு நபருக்கு மாற்றவோ கூடாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Related Stories: