கூடுவாஞ்சேரி அருகே குமிழி ஊராட்சியில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பனை: சமூக விரோதிகள் அட்டகாசம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே குமிழி ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை சமூக விரோதிகள் ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பனை செய்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த குமிழி ஊராட்சியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, பிளாட் போட்டு விற்பனை செய்கின்றனர். குமிழி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் காடு, மலை மற்றும் சுடுகாடு பகுதிகளில் அரசுக்கு சொந்தமாக மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் பல ஏக்கர் கணக்கில் உள்ளன.

இதனை கடந்த சில நாட்களாக சமூகவிரோதிகள் பொக்லைன் இயந்திரங்களை மூலம் இரவோடு இரவாக சுத்தம் செய்து, பிளாட் போட்டு, குடிசைகள் அமைத்து லட்சக்கணக்கில் விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். இதில், அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிலத்தையும் சமூக விரோதிகள் விட்டு வைக்கவில்லை. இதேபோல், குமிழி ரெட்டியார் ஊர் மயான பாதை, வெந்தமலை குன்று பகுதிகள், அரசு பள்ளி அருகில் உள்ள குளத்தை ஒட்டியுள்ள பகுதிகள், மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்பட சுமார் 30 ஏக்கர் அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதனை தடுக்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர், ஊர் பக்கமே எட்டி பார்ப்பதில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி, அரசு நிலங்கள் நாளுக்கு நாள் காணாமல் போகிறது என பொதுமக்கள் சரமாரியாக குற்றஞ்சாட்டுகின்றனர். இதில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: