கொரோனா இல்லாத கைலாசாவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் : மதுரை விளையாட்டுக் கழகம் நித்தியானந்தாவிற்கு கடிதம்!!

மதுரை : கைலாசாவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என மதுரையில் உள்ள ஒரு விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நித்தியானந்தா, கைலாசா நாட்டின் தங்க நாணயங்களை வெளியிட்டார். அத்துடன் ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற வங்கியையும் தொடங்கி, 300 பக்கங்கள் கொண்ட பொருளாதார கொள்கையை அவர் வெளியிட்டார்.கைலாசா குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துவிட்டது. இதையடுத்து, மதுரையில் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார், கைலாசாவில் ஹோட்டல் தொடங்க அனுமதி கேட்டிருந்தார். அதுமட்டுமல்ல திருச்சியில் உள்ள சாரதாஸ் துணிக் கடையும் அங்கு கடை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வேண்டும் என மதுரையின் வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் எனும் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரத்தை பெரிதும் போற்றும் நித்தியானந்தா ஜி அவர்கள், தங்களது கைலாஸா நாட்டில் வரும் 2021 ஆண்டில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தற்சமயம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளதால் கோவில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டுக்களை நடத்துவது சவாலான காரியமாக உள்ளது. ஆதலால் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமே இல்லாத கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும். 4000 ஆண்டுகளாக நடத்தப்படும் வீர விளையாட்டு கொரோனாவால் தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக கைலாசா நாட்டில் நடத்த அனுமதி கோருகிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: