கிசான் திட்டத்தில் முறைகேடு..: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 4 ஒப்பந்த ஊழியர்களை கைது செய்தது சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி: கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 4 ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு வழங்கப்படும், பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில், தமிழகத்தில், விவசாயிகள் அல்லாத போலி பயனர்கள் சேர்க்கப்பட்டு முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு  குறித்து வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, 13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, இந்த திட்டத்தல் உள்ள உறுப்பினர்கள் குறித்து ஆய்வு செய்யவும், ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்கள் பற்றிய முழு விவரங்களை உடனே தெரிவிக்கவும் உத்தரவிட்ட நிலையில், முறைகேடாக சேர்ந்து இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக திட்டத்தில் இருந்து நீக்கவும்  உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயி அல்லாதோர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. முதல் கட்டமாக, பிரதமரின் விவசாய திட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்ட சுமார் 37 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.  அவர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிமேகலை, வீரன், ஏழுமலை மற்றும் கண்ணப்பன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் அளித்த புகாரின் பேரில் 4 ஒப்பந்த ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், முறைகேட்டில் ஈடுபட்டதாக அம்மாவட்டத்தில் 2 உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: