என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மாஜிஸ்திரேட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி  சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரவுடி இளநீர் சங்கர் தன்னை பிடிக்க முயன்ற காவலர்களை தாக்கியதால் கடந்த 21ம் தேதி என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.  இந்த என்கவுன்டர் வழக்கை அயனாவரம் காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தன்னுடைய  மகனின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டுமென்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, என்கவுன்டருக்கு பிறகான பிரேத பரிசோதனை உள்பட பல்வேறு நடைமுறைகளை கோர்ட்டில் தெரிவித்தார். மேலும், உடற்கூராய்வு செய்யப்பட்ட வீடியோ பதிவு மாஜிஸ்திரேட் வசம் உள்ளதால் மறு பிரேத பரிசோதனைக்கான அவசியம் இல்லை.அதேபோல, அயனாவரம் காவல் நிலைய வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் கடந்த 25ம் தேதி முதல்  விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்றார்.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், பிரேத பரிசோதனையின் போது சங்கரின் குடும்பத்தினர் உடன் இல்லாததால், மறு பிரேத பரிசோதனை  நடத்த வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, உடற்கூராய்வு தொடர்பான அறிக்கையை எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசை நீதிமன்றம் தானாக முன்வந்து இணைக்கிறது என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 4ம் ேததிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: