29 தீயணைப்பு துறை வீரர்கள் பிளாஸ்மா தானம் தமிழகத்தில் 225 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை : கொரோனாவில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் 29 பேர் நேற்று பிளாஸ்மா தானம் வழங்கினர். தமிழகத்தில் இதுவரை 225  பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் பிளாஸ்மா பெற்று இங்குள்ள பிளாஸ்மா வங்கியில்  சேமிக்கப்படுகிறது. பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்த குணமடைந்த 29 தீயணைப்பு வீரர்கள் நேற்று பிளாஸ்மா தானம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் வடக்கு மண்டல  இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி : தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை இதுவரை 225 பேருக்கு  அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பிளாஸ்மா தானம் அளித்த  தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: