உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்களின் அறைகளை திறக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு பார்கவுன்சில் கடிதம்

சென்னை: உயர் நீதிமன்றம் வரும் 7ம் தேதி திறக்கப்படுவதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்களின் அறைகளை திறக்க அனுமதிக்க  வேண்டும் என தலைமை நீதிபதிக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அனுப்பியுள்ள கோரிக்கை  கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசும், தமிழக அரசும் அறிவித்த ஊரடங்கையடுத்து சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற  மதுரைக்கிளை, மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முக்கிய வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ்  மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் எங்கள் கோரிக்கையை பரிசீலித்த உயர் நீதிமன்றம், வரும் 7ம் தேதி முதல் சென்னை உயர்  நீதிமன்றத்தில் 6 அமர்வுகள் நேரடியாக விசாரணை நடத்த முடிவு செய்து அறிவித்துள்ளது.

நீதிபதிகள் குழுவின் இந்த முடிவை தமிழ்நாடு பார்கவுன்சில் வரவேற்கிறது. அதேநேரத்தில், வக்கீல்கள் தங்களின் அறைகளுக்கு செல்ல முடியாத  நிலை உள்ளது. பெரும்பாலான வக்கீல்களின் வழக்கு ஆவணங்கள் அவர்களின் அறைகளிலேயே வைக்கப்பட்டுள்ளன. வழக்கு ஆவணங்கள் இல்லாமல்  நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிட முடியாது. எனவே, வக்கீல்களின் அறைகளை திறந்து அவர்கள் தங்களின் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க  வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: