தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு வணிக வளாகங்கள் திறப்பு - வாடிக்கையாளர்களை கண்காணிக்க புதிய செயலி அமைப்பு!!!

சென்னை:  தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து நிறுவனங்களையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த 5 மாத காலமாக அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டிருந்தன. இதனையடுத்து தமிழக அரசு பலகட்ட ஊரடங்குகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் வணிக வளாகங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வணிக வளாகங்களை திறக்கப்பட்டதற்கு பின்பு பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்று தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் வழிபாட்டு தளங்களிலும் பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, சென்னை வேளச்சேரி வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்களை கண்காணிப்பதற்காக புதிய செயலி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வளாகத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

தொடர்ந்து, தொற்று பரவா வண்ணம் கடை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கும் சானிடைசர் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் பொதுமக்கள் கொண்டுவரும் பொருட்களை சானிடைசர் மூலம் சுத்தம் செய்யக்கூடிய பிரத்தியேக இயந்திரமும் இந்த வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உடல் வெப்பநிலையை அறிந்துகொள்வதற்கு பல்வேறு கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் கூடுதல் வெப்பநிலையை உடைய பொதுமக்கள் உடனே திருப்பி அனுப்பப்படுவதாக வளாகத்தின் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செல்போனில் ஆரோக்கிய செயலி உள்ளிட்டவற்றை டவுன்லோடு செய்திருந்தால் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் 13 ஆயிரம் பொதுமக்கள் வரை மட்டுமே இந்த வளாகத்தில் அனுமதிக்கப்படுவதாவும், அதற்கு மேல் வருபவர்கள் அனைவரும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட உள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: