சென்னையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதற்கு முன்பு வாங்கிய ரூ.1,000 மாதாந்திர பாஸ் செல்லும்: போக்குவரத்து துறை

சென்னை: சென்னையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதற்கு முன்பு வாங்கிய ரூ.1,000 மாதாந்திர பாஸ் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கி போய் கிடந்த மாநகர போக்குவரத்து சேவை 160 நாட்களுக்கு பின்னர் இன்று தொடங்கியுள்ளது. இன்று காலை முதல் சென்னையில் மட்டும் 3000 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், தமிழகம் முழுவதும் 24 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. பயணிகளுக்கும் பேருந்து மற்றும் ஓட்டுனர்களுக்கும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதற்கு முன்பு வாங்கிய ரூ.1,000 மாதாந்திர பாஸ் தானாகவே காலாவதியாகி விட்டதால், அவை மீண்டும் செல்லுமா? செல்லாதா? என்று பயணிகள் மத்தியில் குழப்பம் காணப்பட்டது.

இதுகுறித்து பேசிய மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர், மாநகர போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்ட ஓரிரு தினங்களுக்கு முன்பு வரையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரூ.1,000 மாதாந்திர பாஸ் பெற்றுள்ளனர். காலாவதியான அந்த பாஸ்சில் அவர்கள் பயணம் செய்யாத நாட்களை கணக்கிட்டு, வரும் நாட்களில் அவர்களை பயணம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. புதிய ரூ.1,000 மாதாந்திர பாஸ்கள் இன்று முதல் வழங்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது. தற்போது அதுகுறித்து எந்த வித முடிவும் எடுக்கப்படவில்லை, என தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை மாநகரப் போருந்தில் மார்ச் மாதம் எடுத்த ரூ.1000 பாஸை செப்டம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் எடுத்த பாஸ் ஒரு வாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருப்பதால் தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: