நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி விசிக முற்போக்கு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

சென்னை: கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஜெஇஇ நுழைவுத்தேர்வை நடத்தக்கூடாது, நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் இணையவழி ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. விசிக தலைவர் திருமாவளவன் அங்கநூரில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல், சென்னையில் மாணவர் அமைப்பினர் நேரடியாக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

போராட்டத்தின்போது திருமாவளவன் பேசியதாவது:  இந்தியா முழுவதும் நீட் தேர்வையும், நுழைவுத்தேர்வையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். கொரோனா நெருக்கடி உள்ள இந்தசூழலில் மத்திய அரசு பிடிவாதமாக நீட் தேர்வையும், ஜெஇஇ தேர்வையும் நடத்தியே தீருவோம் என்று முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. சமூக பரவல் நிகழ்ந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் அரசு நீட் தேர்வை நடத்த முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வு அறிமுகம் செய்ததில் இருந்து பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. பல்வேறு மாநில முதல்வர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தமிழக அரசும் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: